குக்கே என்னும் மகா சாம்ராஜ்ஜியம்! / மகத்துவமிக்க மத்வ மகான்கள் - 10

குக்கே கோவிலின் முகப்பு
``கத்துவம் மிக்க மத்வ மஹான்கள்’’ பகுதியில், முதலில் துவைத தத்துவத்தை ஸ்தாபித்த ஸ்ரீமத் மத்வாச்சாரியார் அவர்களில் இருந்து தொடக்கி, ஸ்ரீ பத்மநாபதீர்த்தர், ஸ்ரீ நரஹரி தீர்த்தர், ஸ்ரீ மாதவதீர்த்தர், ஸ்ரீ அக்ஷோப்யதீர்த்தர், ஸ்ரீ ஜெயதீர்த்தர், ஸ்ரீ வித்யாதிராஜ தீர்த்தர், ஸ்ரீ கவிந்திர தீர்த்தர், ஸ்ரீ ராஜேந்திர தீர்த்தர் ஆகிய மகான்களை வரிசைப்படி தரிசித்து வந்தோம். இதுவரை மத்வரையும் சேர்த்து ஒன்பது மகான்களை தரிசித்துள்ளோம். 

இனி நாம் வரிசையாகவோ அல்லது மடங்களின் வரிசைப் படியோ நாம் காண இயலாது. காரணம், ஒவ்வொரு மடத்திக்கும் இதுவரை பல மஹான்கள் பீடத்தை அலங்கரித்துவிட்டன. ஆகையால், மடத்தின் வரிசைப்படி சென்றால், ஒரு மடம் நிறைவு பெற பல மாதங்கள் வரை எடுக்கும். ஆகையால், இனி ரேண்டமாக (Random) மகான்களின் பிருந்தாவனத்தை தரிசிப்போம்!

முதல் மகான்

ந்த தொகுப்பில், நாம் காணவிருக்கும் மகான், ``ஸ்ரீ விஷ்ணு தீர்த்தர்''. இவர் ஸ்ரீ குக்கே சுப்ரமண்யா மடத்தை சார்ந்த மகான். அதுவும், இந்த மடத்தின் முதல் மகானும் ஆவார். மேலும், மிக பெரிய ஆச்சரியம் என்னவென்றால், மத்வாச்சாரியாரின் பூர்வாஷ்ரம இளைய சகோதரர்தான் ஸ்ரீ விஷ்ணு தீர்த்தர். இந்த மடத்திற்கு தனியாக குக்கே சுப்ரமண்யா கோயிலே உள்ளது. இந்த கோயிலில் சுப்ரமண்யா என்று சொல்லக் கூடிய முருகன் அருள்கிறார். விஷ்ணுதீர்த்தரை தரிசிப்பதற்கு முன்பாக, அறிய பொக்கிஷமாய் திகழும் ``சம்புடம் நரசிம்மரை’’ பற்றியும், ``ஸ்ரீ குக்கே சுப்ரமண்யா மடத்தையும், கோயிலையும்’’ பற்றி சற்று தெரிந்துக் கொள்வோமா!
---------------------------------------------------------------------------------------
ADVT

---------------------------------------------------------------------------------------
அதிசய சம்புடம் நரசிம்மர்

ஸ்ரீ மத்வாச்சாரியார், பத்ரிகாஸ்ரமம் சென்று பத்ரிநாதரை தரிசித்த போது, மத்வருக்கு ஸ்ரீ வேதவியாச தேவர், `‘வியாச முஷ்டி’’ என்று சொல்லப்படும் எட்டு சாளக்கிராமத்தை வழங்கினார். இதில், ஆறு சாளக்கிராமங்கள் தற்போது வரை குக்கே சுப்ரமண்யா மடத்தில் பூஜிக்கப்பட்டு வருகிறது என்பது, இந்த மடத்திற்கும் கோயிலுக்கும் மாபெரும் பெருமை. 

மேலும், வியாஸமுஷ்டிகளுடன் சேர்த்து, மத்‌வாச்சாரியாருக்கு ஒரு நரசிம்ம சாளக்கிராமத்தையும் வழங்கினார், வேதவியாசர். இது மிகவும் சாந்நித்தியம் (சக்திவாய்ந்தது) என்று கூறப்படுகிறது. மத்‌வாச்சாரியார் இந்த நரசிம்ம சாளக்கிராமத்தை, ஒரு சம்புடத்தில் (பெட்டி) வைக்கிறார். அதில் 22 லட்சுமி நாராயண சாளக்கிராமமும், 5 வியாஸமுஷ்டி சாளக்கிராமமும் உள்ளன. இவைகளை தினமும் பூஜித்து வருகிறார்கள்.

அதிசய சம்புடம் நரசிம்மர்

நரசிம்ம சாளக்கிராமம் தினமும் பூஜிக்கப்படும் போதிலும், அவை எப்போதும் பெட்டிக்குள் வைத்தே இருக்கும். அபிஷேகத்திற்காக மட்டுமே சம்புடத்தில் இருந்து வெளியே எடுக்கப்படும். இந்த பெட்டியை திறந்து உள்ளே உள்ள சாளக்கிராமத்தை தொடும் அதிகாரம், குக்கே சுப்ரமண்யா மடாதிபதிக்கே உண்டு. வேறு யாரும் இந்த சாளக்கிராமத்தை காணவோ தொடவோ அனுமதி இல்லை. ஆனால், மடத்தின் பீடாதிபதி நோயுற்றுவிட்டால், அந்த நாட்களில் மட்டும் இந்த சாளக்கிராமத்தின் பூஜை உரிமை, உடுப்பியின் ஸ்ரீ பெஜாவர் மடாதிபதிக்கு வழங்கப்படும்.

இன்றும் பூஜை செய்யும் விஷ்ணுதீர்த்தர்

முதலாம் மடாதிபதியான ஸ்ரீவிஷ்ணுதீர்த்தர், குக்கே சுப்ரமண்யா கோயில் மலை அருகிலுள்ள ``குமாரமலை’’ என்னும் பகுதியில் உள்ள காடுகளில் இன்றும் தவம் செய்துக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. மேலும், தினமும் இரவில் விஷ்ணுதீர்த்தர் குக்கே சுப்ரமண்யா மடத்திற்கு வருவதாகவும், சம்புட நரசிம்மருக்கு பூஜை செய்வதாகவும், கோயிலின் கர்பகிரகத்தில் கோயில் பூட்டப்பட்ட பிறகும்கூட, நடுநிசியில் மணிகள் ஒலிப்பதை பல பக்தர்கள் கேட்பதாகவும் கூறப்படுகிறது. இந்த மடத்தின் இரண்டாவது மடாதிபதியாக இருந்தவர், ``ஸ்ரீ அனிருத்ததீர்த்தர்’’ இவரும் ஸ்ரீ மத்‌வாச்சாரியாரின் நேரடி சீடராக இருந்தார் என்று குக்கே சுப்ரமண்யா மடம் தெரிவிக்கிறது. ஆனால், இதற்கான போதிய ஆதாரங்கள் இருப்பதாக தெரியவில்லை.

அதிசய சம்புடம் நரசிம்மர் (அலங்காரங்கள் இல்லாமல்)

சம்புட நரசிம்ம சாலிகிராமத்தை (பெட்டியுடன்) எடுத்துக் கொண்டு காட்டுக்குள் விஷ்ணுதீர்த்தர் சென்றார் என்றும், அனிருத்ததீர்த்தரின் வேண்டுகோளுக்கிணங்க, நரசிம்ம சாலிகிராமத்தை மீண்டும், குமாரதாரா நதியின் வழியாக திருப்பி அனுப்பினார் என்றும் நம்பப்படுகிறது.

மன்னனின் விபரீத ஆசை
னிருத்ததீர்த்தரின் காலத்தில், சம்புட நரசிம்ம சாளக்கிராமத்தின் மகிமையை கேள்விப்பட்ட, ஹொய்சள வம்சத்தைச் சேர்ந்த ``பல்லாலராயன்’’ என்ற மன்னன், அதை காணவேண்டும், தரிசிக்க வேண்டும் என்ற ஆவலில் நரசிம்ம சாளக்கிராமம் உள்ள சம்புட பெட்டியை திருடிவிடுகிறார். பிறகு, அரண்மனைக்கு எடுத்துச் சென்ற சம்புட பெட்டியினை திறக்க முயல்கிறார், பல்லாலராயன். ஏதேதோ செய்துப் பார்க்கிறான், சம்புடத்தை திறக்க முடியவில்லை. பல்லாலராயனுக்கு இன்னும் ஆர்வம் அதிகமாகிறது.

ஆகையால், அக்காலத்தில் கருமம் தொழிலாளர்கள் (இரும்புத் தொழிலாளர்கள்) என்னும் பெயர் கொண்ட கடுமையான வேலைக்கு பயன்படுத்தப்படும் உடல் வலிமைமிக்க நான்கு நபர்களை அழைத்து, சம்புடத்தை திறக்க கட்டளையிட்டார்.

பல்லாலராயன் (AI)

அவர்கள் பல மணிநேரம் முட்டி மோதினார்கள். சம்புடத்தை திறக்க முடியவில்லை. மேலும், ஒவ்வொருவராக உயிரிழந்தும் போனார்கள்.
யானையே மடிந்தது, மிக பெரிய யானை ஒன்றை வரவழைத்து, சம்புடத்தை திறக்க உத்தரவிட்டார் மன்னர். அதன்படி பெரிய யானை ஒன்று வந்தந்து. அதன் முன்னே இருந்த சம்புடப் பெட்டியின் மீது ஏறிநின்று, உடைக்க முற்பட்டது.
--------------------------------------------------------------------------------------- ADVT


---------------------------------------------------------------------------------------

ஆனால், சம்புடம் உடையவில்லை. மாறாக யானை மடிந்துவிட்டது. யானை மடிந்த சிறிது நேரத்தில், பல்லாலராயனின் உடல் முழுவதும் கதகதவென எரியத் தொடங்கியது. சம்புட பெட்டியை தொட முற்படும் போது, மன்னனின் உடல் மேலும் தீயாக எரியும் உணர்வைக் கண்டார். தான் செய்த தவறை உணர்ந்த மன்னன், மீண்டும் ஸ்ரீ அனிருத்ததீர்த்தரிடம் சம்புட நரசிம்மரை ஒப்படைத்து, அவரின் பரிபூரண ஆசீர்வாதத்தை பெற்ற பிறகுதான், பல்லாலராயனின் உடல் வெப்பம் தணிந்தது.

ஸ்ரீ விஷ்ணு தீர்த்தர் (AI)

இன்றும்கூட குக்கே சுப்ரமண்யா கோயிலில், இந்த கதையை நினைவு கூறும் விதத்தில், கோயிலின் வளாகத்தில், பல்லாலராயரின் திருவுருவச் சிலை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில், தங்களுடைய உடல் வெப்பமும் சீராக இருக்க வேண்டும் என்பதற்காக, பக்தர்கள், பருத்தி, கடுகு, வெண்ணெய் மற்றும் பூசணிக்காய் ஆகியவைகளை காணிக்கையாக செலுத்துகின்றார்கள்.

பல விக்ரகங்கள்
சாலிகிராமங்களுடன், மடத்தின் முந்தைய பீடாதிபதிகளுக்குச் சொந்தமான பல தெய்வ விக்ரகங்களும் உள்ளன. அவற்றில் லட்சுமி நரசிம்மர், விட்டலன், ருக்மணி மற்றும் சத்யபாமா போன்ற மிக முக்கியமானவை ஆகும். தற்போதைய மடாதிபதியாக இருப்பவர் ``ஸ்ரீ வித்யாபிரசன்ன தீர்த்தர்’’ ஆவார். இவர், மக்களுக்காக பல நல்ல செயல்களை செய்திவருகிறார். அதில் ஒன்று பிலிநேலே எனும் இடத்தில் கல்வி நிறுவனத்தை தொடக்கி, அதனை நடத்தி வருகிறார்கள்.

ஸ்ரீ வித்யாபிரசன்ன தீர்த்தர்

நோய்களை குணமாக்கும் குமாரதாரா

ர்நாடக மாநிலம், மங்களூரில் இருந்து 104 கி.மீ., தூரம் பயணித்தால் குக்கே சுப்ரமண்யா கோயிலை அடைந்துவிடலாம். கோயில் எதிர்புறத்தில் குமாரதாரா என்னும் ஆறு ஓடுகிறது. இங்கு குளிப்பதினால் சர்பத்தினால் (பாம்பு) ஏற்பட்ட தோஷங்கள் நிவர்த்தி ஆகுகின்றன. மேலும், குமாரதாரா நதியானது ``சர்வரோக நிவாரணி’’ (எல்லா நோய்களையும் குணமாக்கும் நதி) என்றும் கூறப்படுகிறது. குக்கே சுப்பிரமணிய கோயிலில் நித்யமும் அன்னதானங்கள் நடைபெறுகின்றன. கோயில் அருகிலேயே குக்கே சுப்ரமண்யா மடமும் உள்ளது. குக்கே சுப்ரமண்யா கோயில் மலையின் மீதுள்ளதால், அழகான இயற்கை சூழலின் நடுவில் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு செல்ல, மங்களூரில் இருந்து ரயிலில் பயணிக்கலாம்.

குமாரதாரா நதி

ரயிலில்தான் பயணிக்க வேண்டும். காரணம், மலைகளின் மீதே ரயிலானது செல்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்குள் ரயில் செல்கிறது. கண்களுக்கு எட்டியவரையில் பச்சை பசேலென்று காணப்படுகின்றன. அதில், ஆங்காங்கு லேசான பனிமூட்டம் வேறு.. இந்த கண்கொள்ளா காட்சியினை ரயிலில் பயணம் செய்தால்தான் கண்டு ரசிக்க முடியும். ஸ்ரீ குக்கே சுப்பிரமணிய மடத்தை ``சம்பூத நரசிம்ம மடம்'' என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

மலைகளுக்குள் நுழைந்து செல்லும் ரயில் 
------------------------------------------------------------------------------------------------------
ADVT


---------------------------------------------------------------------------------------
பாம்புகளை காத்தருளும் முருகன்

மேலும், குக்கே சுப்பிரமணிய கோயில் தட்சிண கர்நாடகாவில் தென்கிழக்கு மலைப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மடம், ஸ்ரீ மத்வாச்சாரியாரால் ஸ்தாபிக்கப்பட்டது. மேலும், குமாரதாரா ஆற்றின் கரையில் உள்ள 5,000 ஆண்டுகள் பழமையான புராதண மிக்க கோயிலாக பார்க்கப்படுகிறது. கருடனால் துன்பப்பட்டுவந்த வாசுகி என்கின்ற தெய்வப் பாம்பு, இங்கு குக்கே சுப்பிரமணிய கோயிலில் உள்ள சுப்ரமணியனிடம் தஞ்சம் அடையவே, சுப்ரமணியர், வாசுகி என்னும் பாம்பை காத்து அருளினார் என்கிறது புராணங்கள். 

ஆகையால், பாம்புகளுக்கும் அதிபதியாக குக்கே சுப்பிரமணிய சுவாமி காத்து அருள்கிறார். இன்றும்கூட, குக்கே சுப்பிரமணிய கோயிலில் எண்ணற்ற பல பாம்புகளை சர்வ சாதாரணமாக பார்க்க முடிகிறது. அப்பாம்புகள், யாரையும் தீண்டாது அமைதியாக செல்கின்றது. பக்தர்களும், பாம்பினைக்கண்டால் பதற்றம் கொள்ளாது, இரு கைகளை கூப்பி தரிசித்து செல்கிறார்கள்.

தேர் திருவிழா

இக்கோயிலை, ``சிவல்லி மத்வ அந்தணர்கள்'' (Shivalli Madhwa Brahmins) பூஜித்து வருகிறார்கள். ஸ்ரீ மத்வாச்சாரியாரின் ``தந்திர சார சங்கிரஹத்தின்படி'' (Tantra Sara Sangraha) பூஜைமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர். புராணத்தின்படி, குக்கே சுப்பிரமணிய கோயில், பரசுராமரால் நிறுவப்பட்ட ஏழு புனித தலங்களில் ஒன்றாகும் என்று ஒரு சாரார் சொல்லும் கூற்று. 

மேலும், குக்கே சுப்பிரமணிய கோயிலில் இருந்து, ஒரு பெரியமலை செல்கிறது. அதற்கு ``குமார பர்வதம்'' என்று பெயர். பலரும் இந்த மலையில் ட்ரக்கிங் (Trekking - மலையேற்றம்) செல்கிறார்கள்.

குக்கே சுப்ரமணியா

பரிகாரஸ்தலம்

பாம்புகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள, குறிப்பாக மலைவாழ் மக்கள், காட்டுப் பகுதியில் வசிக்கும் மக்கள் ஆகியோர் இத்திருக்கோயிலில் ``ஆஷ்லேஷா பலி'' (Ashlesha Bali) என்னும் பூஜையும், பாம்புகள் தொடர்புடைய ``சர்ப்பதோஷம்’’ போன்ற தோஷபரிகாரமும் குக்கே சுப்பிரமணிய கோயிலில் செய்யப்படுகிறது. இத்தகைய மாபெரும் திருத் தலத்தை கொடுத்த மகான் ஸ்ரீ விஷ்ணு தீர்த்தர், துவைத வேதாந்த தத்துவத்தின் மாபெரும் அறிஞராக பார்க்கப்படுகிறார். மேலும், உடுப்பி அஷ்ட (எட்டு) மடங்களில் சோதே மற்றும் சுப்பிரமணியா ஆகிய இரு மடங்களை ஸ்தாபித்தவர்.
---------------------------------------------------------------------------------------ADVT


---------------------------------------------------------------------------------------

விஷ்ணுதீர்த்தரின் பெற்றோர்கள் மறைந்த பிறகு, பிரம்ம சம்பிரதாயத்தில் சேர, வீட்டைவிட்டு வெளியேறினார். நேராக தனது பூர்வாஷ்ரம மூத்த சகோதரரான மத்வாச்சாரியாரை சந்தித்து, தானும் பிரம்ம சம்பிரதாயத்தில் ஈடுபட தனது விருப்பத்தை கூறினார். மத்வருக்கும் எல்லையில்லா மகிழ்ச்சி. தன் சகோதரருக்கு வேதாந்த ஞானத்தை புகுத்தி, சந்நியாசமும் கொடுத்தார்.

குக்கே சுப்ரமணியக் கோவில்

மீண்டும் ஸ்ரீ விஷ்ணு தீர்த்தர்

வரின் மூல பிருந்தாவனத்தை பற்றிய தகவல்கள் ஏதும் காணப்படவில்லை. ஸ்ரீ விஷ்ணுதீர்த்தருக்கு பிறகு, ஸ்ரீ அனிருத்த தீர்த்தர் என்னும் மகான், சுப்பிரமணிய மடத்தின் பீடாதிபதியாக பொறுப் பேற்றார். இன்னும் கலியுகம் முற்று பெற்று, அதர்மம் மட்டுமே தழைத்தோங்கும் சமயத்தில், மீண்டும் ஸ்ரீ விஷ்ணுதீர்த்தர் அவதரிப்பார், மக்களுக்கு நல்வழி காட்டுவார் என்று துவைத தத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது. அவர் வருகைக்காக நம் வருங்கால சங்கதியர்கள் காத்திருக்கட்டும். விஷ்ணுதீர்த்தரை நம் வருங்கால சங்கதியர்கள் காணவிருக்கிறார்கள் என்பதனை நினைக்கும் போது, எத்தகைய பாக்கியமிது!

✎ ரா.ரெங்கராஜன்

-----------------------------------------------------------------------------------------------------------------------------
தேதி: 12.08.2025   

 

தங்களின் மேலான கருத்துக்கள், கடிதங்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன. அனுப்பவேண்டிய மெயில் ஐ.டி: madhvacharyatv2023@gmail.com வாட்சப் எண்ணிலும் அனுப்பலாம்.
வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

-----------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள்