கல்வி வரம் தரும் கலைவாணி / சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை - 1.10.2025 / விஜயதசமி - 2.10.2025

அயல் நாட்டில் சரஸ்வதி:

ஜப்பானியர்கள் ‘பென்டென்’ என்னும் பெயரில் சரஸ்வதியை வழிபடுகின்றனர். டிராகன் என்ற அசுர பாம்பு வாகனத்தில் வரும் இத்தேவி சிதார் இசைக்கிறார். இந்தோனேஷியாவிலும், பாலித் தீவிலும் புத்தகங்களை அலங்கரித்து பூஜிக்கும் வழக்கம் இருக்கிறது. இந்த பூஜைக்கு ‘கலஞ்சன்’ என்று பெயர். விஜயதசமி நாளில் பாலித் தீவில் ‘கம்பாத் ஸ்ரிம்’ என்னும் குளத்தில் நீராடி புத்தகங்களை வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது அங்குள்ள மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

விஜயதசமி வித்தியாச வீதியுலா:

கோவை ராஜவீதியில் 300 ஆண்டுகள் பழமையான `சவுடாம்பிகை அம்மன்’ கோயில் உள்ளது. இங்கு விஜயதசமி விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அன்று காலை ஊருக்கு வெளியே உள்ள காவல் தெய்வம் கோயிலிலிருந்து பூரணகும்ப தீர்த்தத்தில் அம்மன் ஆவாகனம் செய்து அழைத்து வருவர். அச்சமயத்தில் இளைஞர்களும், சிறுவர்களும் அம்மன் பெயரை உச்சரித்துக் கொண்டே கலசத்தின் மமுன் கத்திகளால் நெஞ்சிலும், வயிற்றிலும், புஜங்களிலும் அலகு போட்டபடி ஊர்வலமாகச் செல்வர்.

அன்ன சரஸ்வதி தந்த அமுதசுரபி

பராசக்தி அன்னபூரணியாகக் காசியில் அருள்பாலிக்கின்றாள். லட்சுமியை அன்னலட்சுமி என்று அழைக்கிறோம். சரஸ்வதியை அவ்வாறு அழைக்கும் வழக்கமில்லை. அன்ன சரஸ்வதி என்றால் அன்ன வாகனத்தில் பவனிவரும் சரஸ்வதி என்றே பொருள் கொள்வர். சரஸ்வதி அள்ள அள்ளக் குறையாத உணவு தரும் அமுதசுரபி என்னும் பாத்திரத்தை ஆபுத்திரன் என்பவனுக்குக் கொடுத்ததாகவும் அதைக் கொண்டு அவன் உலகமக்களின் பசிப் பிணியைத் தீர்த்ததாகவும் தமிழ்க் காப்பியமான மணிமேகலை கூறுகிறது. சரஸ்வதி ஆலயத்தைக் கலைநியமம் என்பர். மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்திலுள்ள சரஸ்வதி சந்நதி கலைநியமம் என்று அழைக்கப்படுகிறது. இதில் சிந்தாதேவி எனும் பெயரில் வீற்றிருக்கும் சரஸ்வதியே ஆபுத்திரனுக்கு அமுதசுரபியை அளித்து அருள்பாலித்தவள் ஆவாள்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

ADVT

-----------------------------------------------------------------------------------------------------------------------------

துர்க்கை அம்மன்

துர்க்கை அம்மன் எல்லா கோயில்களிலும் வடக்கு நோக்கி காட்சி தருவாள். திருவாரூர் சோமேஸ்வரர் ஆலயத்தில் மட்டும் தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். காவிரிக்கரையில் அமைந்துள்ள அழகிய மோகனூர் தலத்தின் ஆலயக் கருவறையில் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் வலதுபுறம் ஸ்ரீதேவி, இடதுபுறம் பூதேவியோடு நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். நவராத்திரியின் போது ‘திருப்பதியில் ஒரு நாள்’ என்னும் உற்சவம் நடைபெறுகிறது. அன்று ஒரு நாள் மட்டும் திருப்பதி வெங்கடாஜலபதிக்கு நடக்கும் அனைத்து பூஜைகளும் இங்கு நடக்கும். அர்த்தநாரீஸ்வரர் போல கிருஷ்ணனும், ருக்மணியும் இணைந்த அபூர்வ திருக்கோலத்தை இத்தலத்தில் தரிசிக்கலாம். இந்த அமைப்பை சம்மோஹன கிருஷ்ணன் என்பார்கள். புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் திருவோண நட்சத்திரத்தில் சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளுவார்.

கூத்தனூர்:

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவாரூர் வட்டத்தில் உள்ளது கூத்தனூர் சரஸ்வதி ஆலயம். ஒட்டக்கூத்தர் வழிபட்ட தலம். இவ்வூருக்கு பூந்தோட்டம் என்ற பெயரும் உள்ளது. சரஸ்வதிக் கென்றே தனிக்கோயில் உள்ளது.

புகுந்த வீட்டிலிருந்து பிறந்த வீட்டுக்கு:

திருமணமான பார்வதி தன் புகுந்த வீடான கைலாயத்திலிருந்து பிறந்த வீடான வங்காளத்திற்கு விஜயதசமி அன்று வருவதாக கொல்கத்தா மக்களிடையே ஓர் நம்பிக்கை உண்டு. எனவே, துர்க்கை பூஜை வங்காளத்துப் பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இப்பூஜையை ஒட்டிப் பெண்கள் தங்கள் தாய்வீடு செல்வர். புகுந்த வீட்டிலிருந்து பிறந்த வீடு வரும் மகளை பெற்றோர் வரவேற்றுக் குங்குமம், வளையல், புடவை, இனிப்புகள் தந்து மகிழ்கின்றனர்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

ADVT

-----------------------------------------------------------------------------------------------------------------------------

வழிபாட்டின் பலன்:

வேதங்களில் முக்கியமாகப் போற்றப்படும் சரஸ்வதியாகத்தைக் காப்பவள். அறிவு, ஞானம், தேஜஸ், வீரம், வெற்றி ஆகியவற்றை அளிப்பவள். இனிய வாழ்க்கையைக் கொடுப்பவன், யாகத்தின் இறுதியில் கூறப்படும் ‘சுவாகா’ என்ற பதம் சரஸ்வதியைக் குறிக்கும். வீடுகளில் சரஸ்வதியை வழிபட்டால் இன்பம் பெருகும்.

  கோவிந்தராஜன்

அனைவருக்கும் இனிய  சரஸ்வதி, ஆயுத, விஜயதசமி பூஜை நல்வாழ்த்துகள்...

-----------------------------------------------------------------------------------------------------------------------------
தேதி: 30.09.2025   

 

தங்களின் மேலான கருத்துக்கள், கடிதங்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன. அனுப்பவேண்டிய மெயில் ஐ.டி: madhvacharyatv2023@gmail.com வாட்சப் எண்ணிலும் அனுப்பலாம்.
வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

-----------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள்